தமிழகம்

ஆதிச்சநல்லூரில் மழையில் சேதமடையும் தொல் பொருட்கள்!

நிரந்தர செட் அமைக்கும் பணி தாமதம்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் பெய்த திடீர் மழையால், இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் தொல் பொருட்கள் சேதமடைந்தன.

ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மிக முக்கியமான தொல்லியல் தளமாகும். இங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொல்லியல் துறை சார்பில்  இரண்டு முறை அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை அதே இடத்தில் காட்சிப்படுத்த, அதன்மேல் தரமாக கண்ணாடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சைட் மியூசியம் அமைக்கப்பட்டது.

இதை கடந்த 2023 ஆகஸ்ட் 6-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அதற்கு பிறகு பல்வேறு காரணங்களால் பணிகள் அனைத்தும் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 3 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதனை ஏ. பி. சி என்று மூன்று பகுதிகளாக பிரித்துள்ளனர். 'பி' சைட்டில் தான் சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் 'சி' சைட்டில் தற்காலிக கூரைகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்றன.

அந்த இடத்தில் தான் அதிக அளவிலான தொல்பொருட்கள் கிடைத்தன. எனவே அந்த பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக கூரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பெய்த மழை வெள்ளத்தின் போது மழை நீர் உள்ளே புகுந்து தொல்பொருட்கள் சேதமடைந்தன. இதையடுத்து தற்காலிக கூரை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நிரந்தரமாக கூரைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் மந்தகதியில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஆதிச்சநல்லூர் பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதில் அகழாய்வு பணியின்போது தோண்டப்பட்ட குழிகளுக்குள் மழைநீர் தேங்கி, 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த முதுமக்கள் தாழிகளுக்குள் இருக்கும் தொல் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து வருகின்றன.

இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங் குறிச்சி காமராசு கூறும்போது, 'முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட தொல்பொருட்களை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. இதனால் அவை கேட்பாரற்று வெயிலிலும், மழையிலும் சேதமடைந்து வருகின்றன. இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் நிரந்தர செட் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்றார்.

SCROLL FOR NEXT