கோப்புப் படம்
சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, திருநங்கை அப்சரா கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘எனது அரசியல் பயணம் இனி வேறு ஒரு பாதையில் செல்லலாம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாக அதிமுகவில் இருந்து எம்எல்ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், தற்போது அப்சராவும் கட்சியில் இருந்து விலகுவதாக பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘மனதில் கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து எனது விலகலை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கொண்டிருந்த ஆழ்ந்த மரியாதையும், அன்பும், அரசியல் சிந்தனைகள் மீதான நம்பிக்கையும் இந்த இயக்கத்துடன் என்னை இணைத்தது.
எனது அரசியல் பயணத்தில் எனக்கு நீங்கள் வழங்கிய அன்பு, மரியாதை, நம்பிக்கை மாறும் வாய்ப்புகளுக்காக என்னுடைய மனமார்ந்த நன்றி. அதிமுகவில் இருந்து விலகுவது என்பது மனக்கசப்பு அல்லது தனிப்பட்ட வருத்தத்தால் எடுக்கப்பட்டது அல்ல.
எனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக அதிமுகவில் இருந்த காலம் இருக்கும். எனது அரசியல் பயணம் இனி வேறு ஒரு பாதையில் செல்லலாம். ஆனால் மக்களுக்காக பணியாற்ற வேண்டுமென்ற எனது நோக்கம் மாறாது’ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டவர் திருநங்கை அப்சரா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காங்கிரஸில் சேர்ந்து, மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஆனார். பின்னர், மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு கடந்த ஜூலை மாதம் கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் பதவியை பழனிசாமி வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.