மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கதிர் ஜாய்சன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சுகாதாரத் துறையில் 1,429 ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 7-ல் நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன.
தேர்வு மையங்களில் செல்போன் பயன்படுத்தவும், காப்பியடிக்கவும் அனுமதிக்கப்பட்டது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், “தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது. தேர்வில் நடந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தாமல், பணி நியமனம் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “விசாரணை நிறைவடையாமல், பணி நியமன ஆணை வழங்கப்படாது” என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, “1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணி நியமனங்களை வழங்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தேர்வில் நடைபெற்ற முறைகேடு புகார் குறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.