சென்னை: சென்னை, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகளை நியமித்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி உத்தரவிட்டார்.
சென்னைப் பெருநகர முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றிய பி.கார்த்திகேயன், சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கோவையில் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.என்.செந்தில்குமார் சென்னைப் பெருநகர முதன்மை அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, காஞ்சி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற மாவட்ட நீதிபதி வி.பாண்டியராஜ், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். பூந்தமல்லி 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி சி.விஜயகுமார், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிபதியாக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். திருவாரூரில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய பி.செல்வமுத்துக்குமாரி, செங்கல்பட்டு மாவட்ட நிரந்தர லோக்-அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.