சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சார்பில் வீர, தீரச் செயல் புரிந்தவர்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது, முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.
2027-ம் ஆண்டின் வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக கோரப்படுகின்றன.
பரிந்துரைகள் இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீர செயல்களை பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரையுடன் இருக்க வேண்டும். தகுதியுரை அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
‘அண்ணா விருது’க்கு பரிந்துரைப்பதற்கான கடைசி தேதி டிச.15 ஆகும். இணையதளத்தில் பெறப்படும் பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்துக்குள் பெறப்படாத பரிந்துரைகள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர்.