உள்படம்: ராம.ரவிக்குமார்
புதுடெல்லி: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ராம.ரவிக்குமார் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் கோயில் செயல் அலுவலர், மதுரை ஆட்சியர், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு அளித்த தீர்ப்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும்.
நிபந்தனை வகுக்க வேண்டும்: மலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க பொருத்தமான, அவசியமான நிபந்தனைகளை மத்திய தொல்லியல் துறை வகுக்க வேண்டும். கார்த்திகை தீபத் திருவிழாவின்போது கோயில் நிர்வாகம் தீபத் தூணில் விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றச் செல்லும் கோயில் தரப்பு குழுவுடன் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது.
தீபம் ஏற்றும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய தொல்லியல் துறை மற்றும் போலீஸாருடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த நிபந்தனைகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் ராம.ரவிக்குமார் சார்பில் வழக்கறிஞர் ஜி.பாலாஜி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் நிபந்தனைகள், அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மீறும் வகையில் உள்ளன. எனவே, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.