சென்னை: 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்றும், திமுக வேட்பாளர் மு.அப்பாவு வெற்றி பெற்றுள்ளார் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை - திமுக வேட்பாளர் அப்பாவு இடையே நேரடி போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதிமுகவின் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு 2016-ல் தொடர்ந்த தேர்தல் வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது. இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என ஆகாது. ஆனால் இந்த 5 ஆண்டுகளுக்கான எம்எல்ஏ பென்ஷனை அவரால் கேட்க முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2016 - 2021-ஆம் ஆண்டுகளில் அரசு ஆவணங்களில் ராதாபுரம் எம்எல்ஏ என்ற இடங்களில் இன்பதுரை பெயரை நீக்கவும், அதற்கு பதிலாக அப்பாவு பெயரை மாற்றவும் தமிழக அரசுக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, “2016 ராதாபுரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது நான் தபால் வாக்குகளை எண்ணாமல் முடிவுகளை அறிவித்து விட்டார்கள். அது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் 2019 அக்டோபர் 4-ஆம் தேதி தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக தற்போது நீதிபதி அறிவித்துள்ளார்.
2016- 2021 வரை ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ என இன்பதுரை பெயரை நீக்கிவிட்டு என் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது, நீதி வென்றது” எனத் தெரிவித்தார்.