செந்தில்பாலாஜியின் வீடு (இடது), கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் (வலது)

 
தமிழகம்

கரூரில் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கடந்த திமுக ஆட்சி காலத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று (ஜூலை 29ம் தேதி) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் அருகேயுள்ள ராமமேஸ்வரப்பட்டியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் இன்று (ஜூலை 29ம் தேதி) காலை 7 மணிக்கு இரு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அங்கு சோதனையிட்டு செந்தில்பாலாஜியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

6 இடங்களில் சோதனை:

செந்தில்பாலாஜியின் நேர்முக உதவியாளரான சுப்பிரமணியன் மூர்த்திபாளையம் வீடு, தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரின் கோயம்பள்ளி வீடு, கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம், கரூர் கோதை நகரில் உள்ள சக்தி மெஸ் கார்த்தி, அதன் பங்குதாரரான ரமேஷ் வீடு என 6 இடங்களில் கரூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் கோதை நகரைச் சேர்ந்த கார்த்தி, ரமேஷ் ஆகிய இருவரும் தவெக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாக ஜூலை 1-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள்.

SCROLL FOR NEXT