தமிழகம்

அகல் விளக்கு பதிப்பக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

ச.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செயல்பட்டு வரும் அகல் விளக்கு பதிப்பக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று காலை தொடங்கி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்து விநியோகம் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

கோவை பெரியார் நூலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட புத்தகங்கள் தொடர்பாக எழுத்தாளர்கள் மத்தியில் பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்தப் பதிப்பகங்கள் தங்களது புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு கொள்முதல் செய்து விநியோகம் செய்வதற்காக லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், இந்தப் பதிப்பகங்கள் மூலம் வெளியிடப்பட்ட சில புத்தகங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாகவும், அவற்றில் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சர்ச்சைக்குரிய புத்தகங்கள் அகற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடவாசல் நடு அக்ரகாரம் தெருவில் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மாடியில் அகல் விளக்கு பதிப்பக அலுவலகம் செயல்பட்டு வருவது தெரியவந்தது.

சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவர் இந்த அலுவலகத்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அலுவலகத்தில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு நான்கு பெண்கள் பணியாற்றி வருகின்றனர். கணினி உள்ளிட்ட அலுவலக வசதிகளுடன் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கணினித் தரவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், அங்கு பணியாற்றும் நான்கு பெண்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தெந்த புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்டன, அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பணப் பரிவர்த்தனைகள் ஏதேனும் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்தும் ஆவணங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் இந்த அதிரடி சோதனையால் குடவாசல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT