கோப்புப் படம்

 
தமிழகம்

“இடைத்தேர்தல் போட்டி குறித்து ஜூலை 4ல் அறிவிக்கப்படும்”: கிருஷ்ணசாமி

மு.வேல்சங்கர்

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் வரும் 4-ம் தேதி நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தங்கள் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார். அப்போது அவர், “தமிழக முதல்வரை நடிகர்கள், நடிகைகள் எளிதாக பார்க்க முடிகிறது. ஆனால், மக்களின் பிரச்னைகள், கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரை நாங்கள் சந்திக்க முடியாத நிலை இருக்கிறது.

விஜய் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்பு பேசியதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போது, விஜய்யின் அரசு தொடர்பாக பல கேள்விகள் இருக்கின்றன. அரசு வெளிப்படைதன்மையாக இருக்கிறது என்று சொன்னால் மட்டும்போதாது. செயலில் இருக்க வேண்டும்.

விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு, பூரண மதுவிலக்கு கொண்டு வந்து இருக்க முடியும். ஆனால், சுமார் 700 மதுகடைகளை மூடி உள்ளனர். ஊழல் ஒழிப்புக்கு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கீழ் இருந்து மேல் வரை ஊழலில் சிக்கி தவிப்பது டாஸ்மாக். டாஸ்மாக் நமது சமூகத்தின் மிகப்பெரிய கேடாகும். டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கையில் லஞ்சம் வாங்கினார்கள் என கூறினால் அதனால் பெரிய பலன் இல்லை. டாஸ்மாக்கை மூடினால்தான், முழுமையானதீர்வு கிடைக்கும்.

அன்று பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக விஜய் கூறினார். ஆனால், இன்று பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக வாங்கப்படுகிறது. அன்று குற்றம் கூறி பிரச்சாரம் செய்யப்பட்ட விஷயம், இன்று நியாயப்படுத்தப்படுகிறது. இது எப்படி சரியாக இருக்க முடியும்?

தமிழக அரசு ரூ.13 லட்சம் கோடி கடன் வாங்கி இருப்பதாகக் கூறினால் போதாது. அப்பணம் ஊதரித்தனமாக செலவிடப்பட்டதா, ஊழல் நடந்ததா என சுட்டிக்காட்டி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால், நன்மையாக இருக்கும்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் சென்னையில் வரும் 4 ம் தேதி நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி உடன் இருந்தார்.

SCROLL FOR NEXT