சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நாளை (செப்.25) இம்மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என்று தமிழக நிதித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதை அடுத்து, தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாரத்துக்கு 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வரும் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் இந்த மாதத்தில் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவானது.
இதனையடுத்து, நாளைய தினமே தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கும் நாளையே ஓய்வூதியமும் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் ஏற்கனவே வழிக்காட்டுதல்களை வழங்கி உள்ளது.
இந்த சூழலில் மாநில அரசின் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாளைய தினம் (செப்.25ம் தேதி) ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும் என தமிழக நிதித்துறை செயலர் அறிவித்துள்ளார்.