வேட்பாளர் சலீம் உடன் ஆனி ராஜா
படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: “தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தவெகவிடம் ஆதரவு கேட்டுள்ளோம். அவர்கள் இதுவரை முடிவு சொல்லவில்லை” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஆனி ராஜா தெரிவித்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவருடன் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஆனி ராஜா கூறியது: “தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கேட்டு தவெகவிற்கு கடிதம் கொடுத்துள்ளோம். அவர்கள் இதுவரைக்கும் எந்தவித முடிவும் சொல்லவில்லை.
தரமாட்டேன் என்று சொல்லாத வரைக்கும் அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஆதரவு கொடுத்தால், அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சி முடிவு எடுக்கும்” என்றார்.
முன்னதாக. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளரும், வேட்பாளருமான சலீம் கூறுகையில், “இடைத்தேர்தல் என்றால் பணம் கொட்டும். இதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்பேன். ட்ரோன் உள்ளிட்ட பல விஷயங்களை பணம் விநியோகத்தை தடுக்க பயன்படுத்தவேண்டும்” என்று தெரிவித்தார்.