‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை
கோவை: “சட்டப்பேரவை ‘டிராமா மன்றம்’ ஆக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகேயுள்ள, தனியார் கல்லூரியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில், மாணவர்கள் அமைப்பு தொடக்க விழா இன்று (ஆக.27) நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நேபாளத்தில் நிகழ்ந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஷா அமைப்பைச் சேர்ந்த 73 பேர் காணவில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களுக்கு சரியான தகவல்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
கல்லூரிகளில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் கல்லூரி அரசியல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சென்சார் போர்டு இன்னும் கடுமையாக செயல்பட வேண்டும். திரைப்படங்களை யார் பார்க்க வேண்டும், பார்க்கக் கூடாது என்பதை திரையரங்குகளில் வயது அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.
பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படமாக இருந்தாலும், எந்தக் காட்சிகளை அனுமதிக்க வேண்டும் என்பதை சென்சார் போர்டு கடுமையாக உறுதி செய்ய வேண்டும்.
சமூக வலைதளங்களுக்கு மக்கள் அடிமையாகி வருகின்றனர். செல்போன் மற்றும் சமூக வலைதள பயன்பாட்டால் நாம் ஒரு ‘ஜோம்பி தலைமுறை’யை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சமூக வலைதளங்களின் மீது நமக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
16 வயதுக்கு கீழ் உள்ளவர்களை சமூக வலைதளங்களில் அனுமதிக்காத வகையில் சில நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆஸ்திரேலியா தடை செய்துள்ளது. இங்கிலாந்தும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்தி சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் சில நல்ல விஷயங்களும் நடைபெறுகின்றன. எனவே, அவற்றை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும்.
20 லட்சம் மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் தற்போது 8 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை நோக்கி முன்னேறி வருகிறோம். எதிர்காலத்தில் 20 லட்சம் மரங்களை நடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் பல்வேறு நதிகளை சுத்தப்படுத்தும் பணிகளிலும் எங்கள் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனையை காவல் துறை முழுமையாக கண்காணித்து தடுக்க வேண்டும். சட்டப்பேரவை ‘டிராமா மன்றம்’ ஆக மாறிவிடக்கூடாது என்பதுதான் எனது கருத்து. சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் மக்களின் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும். பழைய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சட்டப்பேரவை நடைபெற வேண்டும்.
ஆளும் கட்சியிலும் புதியவர்கள், எதிர்க்கட்சியிலும் புதியவர்கள் உள்ளனர். அதனால், சட்டப்பேரவை ‘டிராமா மன்றம்’ ஆக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்று அண்ணாமலை கூறினார்.