அண்ணாமலை | கோப்புப்படம் 
தமிழகம்

சுகாதார ஆய்வாளர் தேர்வு முறைகேடு: பணி நியமனத்தை ரத்து செய்து மறுதேர்வு - அண்ணாமலை வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: ‘சுகாதார ஆய்வாளர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள நிலையில், அதற்கான பணி நியமன ஆணைகளை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்’ என ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து எக்ஸ்தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், மருத்துவப் பணிகள் தேர்வுவாரியம் (எம்ஆர்பி) சார்பாக, சுகாதார ஆய்வாளர் (நிலை-2) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி, 15 நாட்களில் அவசர அவசரமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல புகார்களை, தேர்வு எழுதிய மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.

இந்த முறைகேடுகள் குறித்து, கடந்த பிப்.24-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தும், விசாரணை இன்னும் முடியவில்லை. இந்நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் என்ற பட்டியலை வைத்து, பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்கியிருப்பது தவறானது.

தேர்வு எழுதியவர்கள் பாதிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு கூறலாம்.

ஆனால், இத்தனை முறைகேடுகள் நடந்துள்ளதன் காரணமாக, கடினமாகப் படித்துத் தேர்வெழுதிய இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். ஏற்கெனவே சிபிசிஐடி விசாரணை நிலுவையில் இருப்பதையும் கூறியிருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், அனைத்து தேர்வு மையங்களின் சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், 2025 டிச.7-ம் தேதி நடைபெற்ற தேர்வையும், பணிநியமனத்தையும் உடனடியாக ரத்து செய்து, தீவிர கண்காணிப்புடன், மறுதேர்வு நடத்த வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் முறைகேடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT