தமிழகம்

அண்ணாமலை, டிஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்குகளை பரஸ்பரம் வாபஸ் பெற்றனர்

செய்திப்பிரிவு

சென்னை: அண்​ணா​மலை, டி.ஆர்​.​பாலு ஆகியோர் ஒரு​வருக்கு ஒரு​வர் எதி​ராக தொடர்ந்த அவதூறு வழக்​கு​களை திடீரென பரஸ்​பரம் வாபஸ் பெற்​றுள்​ளனர்.

பாஜக மாநிலத் தலை​வ​ராக பதவி வகித்த அண்​ணா​மலை ‘டிஎம்கே ஃபைல்​ஸ்’ என்ற பெயரில் திமுக முன்​னாள் அமைச்​சர்​கள் பலரின் சொத்து விவரங்​களை கடந்த 2023-ம் ஆண்டு வெளி​யிட்​டார்.

அதில் குறிப்​பாக, திமுக பொருளாள​ரும், எம்​.பி.​யு​மான டி.ஆர்​.​பாலு மற்​றும் அவரது மகனும் முன்​னாள் அமைச்​சரு​மான டி.ஆர்​.பி. ராஜா மற்​றும் அவர்​களது குடும்​பத்​தா​ருக்கு சொந்​த​மான 21 நிறு​வனங்​கள் உள்பட ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்​துகள் இருப்​ப​தாகக் குற்​றம்​சாட்​டி​யிருந்​தார். அதையடுத்து அண்​ணா​மலைக்கு எதி​ராக டி.ஆர்​.​பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சைதாப்​பேட்டை 17-வது குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்​தது. விசா​ரணை ​யின்​போது நேரில் ஆஜரான டி.ஆர்​.​பாலு​விடம் அண்​ணா​மலை குறுக்கு விசா​ரணை நடத்​தி​னார். இந்த குறுக்கு விசா​ரணை​யின்​போது அண்​ணா​மலை​யும் தனது மனைவி பெயரில் சொத்​துகளை வாங்கி ஊழல் முறை​கேட்​டில் ஈடு​பட்​டுள்​ள​தாக டி.ஆர்​.​பாலு குற்​றம்​சாட்​டிய​தால், அண்​ணா​மலை​யும் டி.ஆர்​.​பாலு​வுக்கு எதி​ராக அவதூறு வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கும் இதே நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

இந்​நிலை​யில் அண்​ணா​மலைக்கு எதி​ராக டி.ஆர்​.​பாலு​வும், டி.ஆர்​.​பாலு​வுக்கு எதி​ராக அண்​ணா​மலை​யும் தொடர்ந்​திருந்த இரு அவதூறு வழக்​கு​களை​யும் இரு​வரும் பரஸ்​பரம் வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக​வும், இந்த வழக்​கு​களின் விசா​ரணையை தொடர விரும்​ப​வில்லை என்​றும் மனுக்களை தாக்கல் செய்தனர். இதை ஏற்ற குற்றவியல் நடுவர் செந்தில்குமார் இருதரப்பு வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT