அண்ணாமலை

 
தமிழகம்

“தேசிய வில்வித்தை போட்டிகளில் தமிழக வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்க” - அண்ணாமலை

தமிழினி

சென்னை: “தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில், தமிழக வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் திறமை, நிர்வாக அலட்சியத்தால் முடக்கப்படக் கூடாது” என ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், முந்தைய திமுக ஆட்சியில் நிலவிய நிர்வாக அலட்சியத்தால், 66-வது எஸ்ஜிஎஃப்ஐ (SGFI) தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்திலிருந்து ஒரு வீரர் கூட பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது, நவம்பர் 2026-ல், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட தமிழக வில்வித்தை விளையாட்டு வீரர்களுக்கும் அதே நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

வரும் டிசம்பர் 17, 2026 அன்று, 70-வது எஸ்ஜிஎஃப்ஐ (SGFI) தேசிய வில்வித்தைப் போட்டிகள், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் தொடங்கவுள்ள நிலையில், தமிழக வீரர்களுக்கான தேர்வுப் போட்டிகள் இன்னும் நடைபெறவில்லை.

கடந்த 02.11.2026 தேதியிட்ட உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுப் போட்டிகள், புதிய தேதி அறிவிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்வு, எஸ்ஜிஎஃப்ஐ-க்கான அதிகாரபூர்வப் பதிவு, மாநில அணிக்கான சீருடைகள் என அனைத்தும் நிலுவையில் உள்ளன. போட்டிகள் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக மாணவர்களின் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, மாணவர்களின் விளையாட்டு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, தேர்வுப் போட்டிகளை நடத்தி, தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில், தமிழக வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் திறமை, நிர்வாக அலட்சியத்தால் முடக்கப்படக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT