தனக்கு அளிக்கப்பட்டிருந்த 6 தொகுதிகளுக்கான தேர்தல் சுற்றுப் பயணப் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததன் மூலம் பாஜக-வில் மட்டுமல்லாது தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அண்ணாமலை.
உடல் நலமின்றி இருக்கும் தந்தையை அருகிலிருந்து கவனிக்க வேண்டியுள்ளதால் இந்தப் பொறுப்பில் இருந்து விலகுவதாக காரணம் கூறியிருக்கிறார் அண்ணாமலை. இதன் மூலம் பாஜக தலைமைக்கு மறைமுகமாக பல செய்திகளை அவர் சொல்லியிருப்பதாகவே தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு விலகிய அதிமுக, அண்ணாமலையை மாநில பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினால் தான் மீண்டும் கூட்டணிக்கு வருவோம் என்று என்று நிபந்தனை வைத்தது. அதை ஏற்று அண்ணாமலையை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுக-வுடன் மீண்டும் கைகுலுக்கியது பாஜக தலைமை. இதனால் விரக்தியில் இருந்த அண்ணாமலை, தனிக் கட்சி தொடங்கப் போவதாகக் கூட செய்திகள் கசிந்தன.
இதையடுத்து அவரை இரண்டு முறை டெல்லிக்கே அழைத்து ‘உரிய விதத்தில்’ சமாதானப்படுத்தி அனுப்பியது பாஜக தலைமை. இதைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என அடுத்த கட்ட செய்திகள் வெளியாகின. அதுவும் நடக்காத நிலையில், தமிழக பாஜக முக்கிய தலைவர்களை தலைமை டெல்லி ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்த போது, திருமண நிகழ்ச்சியை காரணம் காட்டி அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் அண்ணாமலை. இந்த நிலையில் தான் அவரை 6 தொகுதிகளுக்கான தேர்தல் சுற்றுப் பயணப் பொறுப்பாளராக அண்மையில் அறிவித்தார் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
இதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டிய அண்ணாமலை, இந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக மாநிலத் தலைமைக்கு தகவல் அனுப்பிவிட்டு அதை பொது வெளியிலும் சொல்லி இருக்கிறார். தன்னை கலந்தாலோசிக்காமல் தன்னை இந்தப் பொறுப்பில் நியமித்ததே அண்ணாமலை விலகலுக்கு முக்கியக் காரணம் என்று சொல்பவர்கள், “மாநிலத் தலைவராக இருந்த தன்னை குறிப்பிட்ட 6 தொகுதிகளுக்குள் அடைப்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்பவரால், தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டும் எப்படிச் செல்லமுடியும்? ” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அமித் ஷா கேட்டுக் கொண்டதன் பேரில் அதிமுக மீதான தனது விமர்சனங்களை அண்மைக் காலமாக நிறுத்திவிட்டார் அண்ணாமலை. எனினும் பழனிசாமிக்கு கைகூப்பி வணக்கம் சொன்னாலும் பழைய சம்பவங்களை எல்லாம் இன்னும் அவர் மறந்ததாகத் தெரியவில்லை. இதனால் அதிமுக-வுக்கும் பாஜக-வுக்கும் தேர்தல் நேரத்தில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகாமல் இருக்கும் பொருட்டே அண்ணாமலையை குறிப்பிட்ட 6 தொகுதிகளை மட்டும் கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்குள் அடக்கியது பாஜக தலைமை என்கிறார்கள்.
இம்முறை அரவக்குறிச்சிக்கு பதிலாக கோவையிலேயே ஒரு தொகுதியில் போட்டியிடும் திட்டத்திலும் இருந்தார் அண்ணாமலை. ஆனால், இப்போதுள்ள சூழலில் அண்ணாமலையை வேட்பாளர் பட்டியலுக்குள் கொண்டுவரவே பாஜக தலைமை யோசிப்பதாகவும் தெரிகிறது. இதையெல்லாம் ஓரளவுக்கு ஊகித்துக் கொண்டே அவர் இந்தப் பொறுப்பிலிருந்து விலகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை 18 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணிக்கு பெற்றுத் தந்தார். இப்போது கூட்டணியில் அதிமுக-வும் இணைந்திருப்பதால் அந்தக் கட்சியின் வாக்குகளையும் சேர்த்தால் பாஜக கூட்டணி சுமார் 40 சதவீத வாக்குகளையாவது தக்கவைத்துக் காட்ட வேண்டும். அது நடக்காமல் போனால், அண்ணாமலைக்கான முக்கியத்துவத்தைக் குறைத்தது தான் அதற்குக் காரணம் என அவரது விசுவாசிகள் நிச்சயம் பிரச்சாரம் செய்வார்கள்.
அகில இந்திய அளவில் காங்கிரஸின் முகமாக இந்திரா காந்தி முன்னிலைப்படுத்தப்பட்ட சமயத்தில் தமிழ்நாட்டில் காமராஜர், காங்கிரஸின் முகமாக நின்று கணிசமான வாக்குகளை பெற்று வென்று காட்டினார். அவருக்குப் பிறகு ஒரு கட்டத்தில் காங்கிரஸின் முகமாக தமிழ்நாட்டில் மூப்பனார் நின்றார். அதனால் தான், 1996-ல் தமாகா-வை அவர் உருவாக்கிய போது பெரும்பகுதியான தமிழக காங்கிரஸார் அவருக்குப் பின்னால் நின்றார்கள்.
அதேபோல் அகில இந்திய அளவில் பாஜக-வின் முகமாக பிரதமர் மோடி முன்னிறுத்தப்படும் நிலையில் தமிழக பாஜக-வுக்கு தனது வருகையால் தனித்துவமான ஒரு முகத்தைக் கொடுத்தவர் அண்ணாமலை. அப்படி இருக்கையில் இப்போது அதிமுக-வுக்காக யோசித்து அண்ணாமலையை ஓரம்போகச் சொல்வது பாஜக-வுக்கு எத்தகைய பலனைத் தரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.