வானதி சீனிவாசன்
சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு மிக வேகமாகவும், உறுதியாகவும் களப்பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள். பாஜக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாநில தலைமை, வேட்பாளர்கள் பட்டியலை டெல்லிக்கு அனுப்பி வைத்த பிறகு, மத்திய தேர்தல் குழு அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பார்கள்.
கூட்டணி என வரும் போது, எதிர்பார்க்கும் தொகுதிகள், கிடைப்பதில் சாதக பாதகம் இருக்கலாம். இதெல்லாம் கலந்தது தான் கூட்டணி. எனவே, பாஜக பெற்றிருக்கும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு, அதற்கான வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அண்ணாமலை போட்டியிடப் போவதில்லை என டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நிச்சயம் அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து 2019-ல் அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள்.
மக்களும் அவர்களுக்கு வாக்களித்தார்கள். அவரை நம்பி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பணத்தையும், நேரத்தையும் செலவழித்து உழைத்தார்கள். ஆனால், தன்னுடைய சுயநலத்தின் காரணமாக, தான் மட்டும் ராஜ்ய சபா எம்.பி. ஆகிவிட்டு, அவரை நம்பி கட்சியில் பயணித்த, கட்சிக்காக உழைத்த அத்தனை பேரையும் அம்போவென கமல்ஹாசன் கைவிட்டுவிட்டார்.
இந்த நேரத்தில் கோவை தெற்கு தொகுதி மக்களை நான் பாராட்டுகிறேன். கமல்ஹாசனுக்கு மிகச்சரியான பதிலை மக்கள் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். தன்னுடைய கட்சிக்குக்கூட விசுவாசமாக இல்லாத, கட்சியின் தொண்டர்களைக் கூட காப்பாற்ற முடியாத ஒருவர், கட்சி ஆரம்பித்து எப்படி வீணாக போவது என்பதற்கு கமல்ஹாசனின் கட்சி ஒரு சாட்சி.
அதனால், புதிதாக கட்சி ஆரம்பிக்கிற எல்லோரையும், மக்கள் இனி அவர்கள் நமக்காக வேலை செய்வார்களா, நம்மோடு தொடர்ச்சியாக பயணிப்பார்களா, கொள்கை அரசியல் என வரும் போது அதில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பார்களா எனப் பார்க்க வேண்டும். இதற்கு, கமல்ஹாசனும், அவரது கட்சியும் சிறந்த உதாரணம். மக்கள் இந்த கட்சியிடம் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.