கன்னியாகுமரியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதன்மை சேவகர் அண்ணாமலை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்: எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி இளைஞர்கள் பொது சேவைக்கு வர வேண்டும் என வீ த லீடர்ஸ் இயக்க முதன்மைச் சேவகர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை 175 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை வீ த லீடர்ஸ் இயக்கம் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரியில் அண்ணாமலை தொடங்கி வைத்து, கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தின் மொத்த கடற்கரை நீளம் 1,075 கிலோ மீட்டர். இதில் 175 கிலோ மீட்டர் தூர கடற்கரையை சுத்தம் செய்ய முன்வந்துள்ளோம். குமரியில் தொடங்கி தூத்துக்குடி வரை இந்த பணி நடைபெறும். ஒரு ஆண்டில் 175 கிலோ மீட்டர் கடற்கரை பகுதி முழுவதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நம்முடைய நோக்கம்.
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு நாம் போடக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகள் மட்டும் 26 ஆயிரம் டன். அதில் 16 ஆயிரம் டன் மட்டும்தான் நாம் எடுக்கிறோம்.
இதனால் நிலத்தடி நீர் எவ்வளவு ஆழமாக போயிருக்கும் என்று சிந்திக்க வேண்டும். நம்முடைய காலத்துக்கு பின்பும் இந்த கடற்கரை இருக்க வேண்டும். இயற்கை சுத்தமாக இருக்க வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இளைஞர்கள் இந்த பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
புகைப்படம் இல்லாத ஒரு இயக்கமாக நாம் மாற முயற்சி செய்ய வேண்டும். அது நம்முடைய முதல் குறிக்கோள். வேலையில் மட்டும்தான் கண்ணும் கருத்துமாக இருப்போம். ஒரு புகைப்படம், செல்பி எடுத்து, நான் வேலை செஞ்சேன் என்று பெருமை தேடுவதற்காக வீ த லீடர்ஸில் யாரும் இருக்கமாட்டார்கள். ஓர் ஆண்டு காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் பக்குவப்பட்டு, நாம் எல்லோருமே தலைவர்களாக மாறுவோம். நாமும் மாற வேண்டும், மற்றவர்களை மாற்ற வேண்டும். அதனால்தான் மாறுவோம் மாற்றுவோம் என்று சொல்கிறோம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.