சென்னை: ‘நீட் மறுதேர்வுக்கான பாதுகாப்பு விதிகள் மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்’ என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சிஆர்பிஎஃப் மற்றும் சிஐஎஸ் எஃப் வீரர்களின் 2 அடுக்கு பாதுகாப்புடன் இந்திய விமானப்படையின் வான்வழிப் போக்குவரத்து.
செயற்கை நுண்ணறிவு கண்காணிப்புடன் கூடிய 4 அடுக்கு சிசிடிவி கண்காணிப்பு. உள்ளே நுழைவதற்கு முன்னதாக பயோ மெட்ரிக் மற்றும் முக அடையளம் காணும் சோதனை.
பல கட்ட உடல் பரிசோதனைகள். பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்புடன் கூடிய பலநிலை மேற்பார்வை... இவையெல்லாம் ஏதோ உயர்
நிலை, வகைப்படுத்தப்பட்ட, ராணுவத் தரத்திலான மென்பொருளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் அல்ல.
ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்காக மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்தான். நுழைவுக்கு முந்தைய தீவிர சோதனை, உடல் பரிசோதனை, தேர்வின் மொத்த நேரத்தை 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரித்தது ஆகியவை மாணவர்கள் மீது இது சுமத்தும் கூடுதல் சுமை என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.
நீட் மறுதேர்வுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அணுகுமுறை சிக்கலைத் தீர்க்காது. மாறாக, புதிய சிக்கல்களை உருவாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.