கோவை பீளமேட்டில் உள்ள கல்லூரியில் வாக்கு செலுத்திய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை.
கோவை: தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் என்று முழுமையாக நம்புகிறேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தபின் அண்ணாமலை செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் என்று முழுமையாக நம்புகின்றேன்.
அதே சமயம், கடந்த இரண்டு மூன்று நாட்களாக வாக்குக்கு பணம் கொடுத்தல் போன்றவை வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து தென் தமிழகத்துக்கு செல்லக் கூடிய பேருந்து வசதிகள் குறைவாக இருக்கின்றன.
இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். பணம், பரிசுப் பொருட்கள் அனைத்தும் ஒரே நாளில் வரவில்லை. முன்னரே கொண்டு வந்து எங்கோ ஒரு இடத்தில் பதுக்கி விநியோகிக்கின்றனர்.
எஸ்ஐஆர் பணிகள் அனைத்தும் நேர்மையான முறையில் நடந்தது. வாக்குக்கு பணம், பொருட்கள் தைரியமாக கொடுக்கின்றனர். தேர்தலுக்கு மூன்று மாதத்துக்கு முன்பே தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
தேர்தல் அன்று கூட பல இடங்களில் திமுக தனது சாஃப்ட் பிரச்சாரத்தை செய்கிறது. தேர்தல் ஆணையம் இதை கண்காணித்து தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.