தமிழகம்

“எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் ரஜினி” - ஆதவ் அர்ஜுனாவுக்கு அண்ணாமலை கண்டனம்

டெக்ஸ்டர்

சென்னை: “யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “ஆங்கிலத்தில், ‘இல்யூஷன்’ என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள்.

          

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.

அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும். 

தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார். 

அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், இல்யூஷன் என்று கூறலாம்” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசும்போது, “எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இதே திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்தது. 

அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது. அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் மிரட்டலை சமாளிக்கும் மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது” என்று கூறியிருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT