“நான் எந்தத் தொகுதியையும் கேட்கவில்லை. எந்தத் தொகுதிக்கும் போட்டி போடவில்லை. நான் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைத்தால் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம்” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என எழுத்துபூர்வமாக கட்சியிடம் தெரிவித்து விட்டேன். மாநில மையக்குழுவிலும் என்னுடைய கருத்தை சொல்லியிருந்தேன். அந்தவகையில், மையக்குழுவில் இருந்து மேலிடத்துக்கு அனுப்பப்பட்ட பட்டியலில்கூட என் பெயர் கிடையாது.
பியூஷ் கோயலிடமும், பி.எல்.சந்தோஷ், தேசிய தலைவர் நிதின் நபினிடமும் என்னுடைய கருத்தை தெரிவித்திருந்தேன். கட்சி என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து, பிரச்சாரத்துக்கு என்னை பயன்படுத்தியிருப்பது எனக்கு மகிழ்ச்சி. நான் எந்தத் தொகுதியையும் கேட்கவில்லை. எந்தத் தொகுதிக்கும் போட்டி போடவில்லை. நான் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைத்தால் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். அதில் எனக்கு விருப்பம் இல்லை.
வரும் 21-ம் தேதி வரை அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறேன். அதுமட்டுமே என்னுடைய குறிக்கோள். எல்லா நேரத்திலும் எல்லா சண்டைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு இருக்க முடியாது. ஒவ்வொரு தேர்தலுக்கு ஒவ்வொரு சண்டை தான் போட முடியும். இந்த தேர்தலுக்கு எனது சண்டை என்பது, ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்வது தான்.
2024 மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட்ட போது கூட எனக்கு சிறு வருத்தம் இருந்தது. நம்மை நம்பி நிறைய வேட்பாளர்களை போட்டியிட வைத்தோம். உதாரணத்துக்கு, ஓபிஎஸ். அவர் பாஜக அலுவலகத்துக்கு வந்தபோது, நான் அவரிடம் மக்களவைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அவரும் அதை ஏற்று போட்டியிட்டார். அவருக்கே தேர்தல் பிரச்சாரம் அரை மணி நேரம் தான் செய்ய முடிந்தது. அதேபோல், டிடிவி. தினகரனுக்கும் ஒரு மணி நேரம் தான் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
அன்று எனக்கு பெரிய மனக்குறை இருந்தது. எத்தனையோ பாஜக வேட்பாளர்களுக்கு என்னால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அந்தக் குறையை இந்த சட்டப்பேரவை தேர்தலில் என்னால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்னும் நிறைய தேர்தல் வரும். அப்போது, போட்டி போட்டுக்கொள்ளலாம். மக்கள் எப்போதும் என் மீது அன்போடு தான் இருப்பார்கள்.
இந்த தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டும். திமுக-வின் தவறுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கு வலிமையாகப் பேச வேண்டும். இன்று அது என்னுடைய பொறுப்பாக பார்க்கிறேன். தமிழக மையக்குழுவில் இருந்தே பெயர் செல்லவில்லை என்றால், பாஜக எப்படி எனக்கு சீட் கொடுப்பார்கள்? நான் கட்சியிடம் போட்டியிட விரும்பவில்லை. நீங்கள் எந்த பொறுப்பு கொடுத்தாலும் செய்கிறேன் என சொல்லியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.