தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் நடைபெற்ற பொங்கல் விழாவைத் தொடங்கிவைத்தார் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை.
தென்காசி: தமிழகத்தில் கனிமவளக் கொள்ளையை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
பாஜக சார்பில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தார். விழாவில் 1,300 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டனர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்று, பானையை உடைத்தார். பின்னர் அண்ணாமலை பேசியதாவது: நல்ல மனிதர்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். வரும் தேர்தலில் தேசியவாத சிந்தனை உள்ளவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
வாசுதேவநல்லூர் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தன. ஆனால், செண்பகவல்லி தடுப்பணையில் இருந்து தண்ணீர் கிடைக்காமல் போனதால் விளை நிலங்கள் குறைந்துவிட்டன.
செண்பகவல்லி தடுப்பணையை சரி செய்து, தண்ணீரை கொண்டுவருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை.
தமிழக முதல்வர் 5 முறை கேரள முதல்வரை சந்தித்தார். ஆனால் ஒருமுறைகூட செண்பகவல்லி தடுப்பணை குறித்து அவர் பேசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, மத்திய அரசு மூலம் கேரள அரசுக்கு அழுத்தம் கொடுத்து, செண்பகவல்லி அணை சீரமைக்கப்படும்.
தென்காசி உட்பட தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளராக இருந்தவர், கனிமவளக் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்தாததால் பதவி விலகியுள்ளார். இவ்வாறு அண்ணாமலை கூறினார். விழாவில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.