சென்னை: தமிழகத்தில் 10 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக விரிவுபடுத்தி இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக, அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய் பிறப்பித்துள்ள உத்தரவு: சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கோயில்களில் செயல்படுத்தப்படும் அன்னதானத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டம் பேரூர் பட்டீசுவரசுவாமி கோயில், காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் தற்போது நாள்தோறும் 100 பேருக்கு வழங்கப்படும் அன்னதானம், இனி 200 பேருக்கு வழங்கப்படும்.
காஞ்சி தேவராஜசுவாமி கோயிலில் 75 பேருக்கு வழங்கப்படும் அன்னதானம் 150 பேருக்கு விரிவுபடுத்தப்படுகிறது. கோவை மாவட்டம் பெரியதடாகத்தில் உள்ள அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில், சென்னை சூளையில் உள்ள அங்காள பரமேசுவரி மற்றும் காசி விஸ்வநாதசுவாமி கோயில் ஆகிய 4 கோயில்களில் 50-ல் இருந்து 100 ஆக உயர்த்தப்படுகிறது.
மேலும், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் திருச்சி மாவட்டம் வயலூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகியவற்றில் தற்போது நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்தக் கோயில்களில் செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, வளர்பிறை சஷ்டி, அமாவாசை, பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் 200 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை அமைச்சர் ரமேஷ் நேற்று தொடங்கி வைத்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.