ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அனிதா ராதா கிருஷ்ணனை கைது செய்து அழைத்து வரும் போலீஸார்.
தூத்துக்குடி/ சென்னை: முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் நேற்று கைது செய்தனர். எஸ்.பி. அலுவலகத்தில் அவரிடம் 5 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடந்த ஜூன் 20-ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஒருமையிலும், அவதூறாகவும் முதல்வர் விஜய் பற்றி பேசியதாக, ஆத்தூர் காவல் நிலையத்தில் தவெக நகரச் செயலாளர் செல்வமுருகன் புகார் கொடுத்தார். அதன்பேரில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2 பிரிவுகளின்கீழ் (பிஎன்எஸ் 352 & 353-2) போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி: இதற்கிடையே, அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத் தரப்பின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, ‘‘1967-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தை பெரும்பாலும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சி புரிந்துள்ளனர்.
மக்களாகிய நாம்தான் வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர். அவர் இதுபோல முதல்வரை அவதூறாகப் பேசியிருக்க கூடாது’’ என்று கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறை தீர்வு கூட்டத்தை அனிதா ராதாகிருஷ்ணன் நடத்திக் கொண்டிருந்தார். காலை 11.20 மணி அளவில் அங்கு வந்த ஏடிஎஸ்பி திபு, ஆய்வாளர் ரென்னிஸ் தலைமையிலான போலீஸார் அவரை கைது செய்யப் போவதாக தெரிவித்தனர்.
அதற்கு அவர், ‘‘வழக்கறிஞர் இல்லாமல் வரமாட்டேன்’’ என்று கூறி தனது காரில் ஏறினார். அவரை போலீஸார் சமாதானம் செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றி, தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். பகல் 12.30 மணி முதல் அவரிடம், எஸ்.பி. அபிஷேக் குப்தா மேற்பார்வையில், போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, எஸ்.பி. அலுவலக வாயிலில் திமுக வழக்கறிஞர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். ‘‘அனிதா ராதாகிருஷ்ணன் உடல்நலம் பாதிக்கப்பட்டவர். மருத்துவரை உள்ளே அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனிதா ராதா
கிருஷ்ணனின் மகன், குடும்ப மருத்துவர், ஒரு வழக்கறிஞரை போலீஸார் உள்ளே அனுமதித்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ராஜவேல் முருகன் தலைமையில் 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும் மருத்துவப்பரிசோதனை செய்தனர்.
இதற்கிடையே, விசாரணை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. மாலை 6.10 மணிக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ‘‘எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையுமாறு சிலர் வலியுறுத்தினர். யாருக்கும் அடிபணிய மாட்டேன்’’ என்றார்.
41 பேர் கைது: இதற்கிடையே, எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், அப்துல் வஹாப் உள்ளிட்ட திமுகவினரை விலகிச் சென்று நிற்குமாறு தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுதிர் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தென்காசி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாபன் உட்பட 9 பேரும், திருச்செந்தூரில் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 32 திமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.