படம்: என்.ராஜேஷ்

தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு

தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் 7 பேரையும் விடுதலை செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவ.3) தீர்ப்பளித்தது.

திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகிறார். திமுக முன்னாள் அமைச்சரான இவர், கடந்த 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இந்த காலக்கட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்தை மீறி 2 கோடியே 7 லட்சத்துக்கு 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (74), அவரது மனைவி ஜெயகாந்தி (66), சகோதரர்கள் சண்முகானந்தன் (58), சிவானந்தன் (61), மகன்கள் அனந்த பத்மநாபன் (47), அனந்த ராமகிருஷ்ணன் (45), அனந்த மகேஸ்வரன் (44) ஆகிய 7 பேரும் சேர்க்கப்பட்டனர்.

கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தொடர்ந்து திமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011-ல் அதிமுக அரசு அமைந்ததும், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு தூசி தட்டப்பட்டு மீண்டும் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

அதனடிப்படையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த தடையை நீக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி கோர முடியாது எனக் கூறி, அமலாக்கத் துறையின் மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

மேலும், தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உயர் நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முடிந்து இன்று (நவ.3) தீர்ப்பு கூறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

மாலை 4.30 மணிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.சுபாதேவி தீர்ப்பை வாசித்தார். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் உரிய ஆதாரங்களுடன் முறையாக நிருபிக்கப்படாததால் 7 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் உற்சாகமாக வெளியே வந்து கார்களில் கிளம்பி சென்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT