

லக்னோ: 1905-ல் லார்ட் கர்சன், 1947-ல் முகமது அலி ஜின்னா ஆகியோரைப் போலவே, தற்போது காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியும் தங்கள் ‘அதிகார மாற்ற’ கனவுகளை நனவாக்க நாட்டை துண்டாட முயற்சிப்பதாக சிவராஜ் சிங் சவுகான் சாடியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜனநாயகத்தைக் காப்போம்; அராஜகத்தை ஒழிப்போம் என்ற பெயரில் நாடு முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று (நவ.3) நடைபெற்ற பேரணிக்கு, பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் தலைமை தாங்கினார். உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் பங்கஜ் சவுத்ரி, துணை முதல்வர் பிரஜேஷ் பதக் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
லக்னோ நகரின் முக்கிய வீதிகளில் இந்த பேரணி நடைபெற்றது. தேசியக் கொடியையும், பாஜக கொடியையும் கைகளில் ஏந்திக்கொண்டு வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே போன்ற முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் சென்றனர்.
பேரணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுகான், “நாட்டை பிளவுபடுத்தவும், உடைக்கவும் மூன்று முறை முயற்சிகள் நடந்துள்ளன. 1905-ல் கர்சன் அதைச் செய்தார். 1947-ல் முகமது அலி ஜின்னா நாட்டை பிளவுபடுத்தினார். இப்போது காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியும் அதைச் செய்கின்றன.
நாட்டில் அராஜகத்தைத் தூண்டிவிட்டு, ஆட்சியை மாற்றலாம் என்று அவர்கள் பகற்கனவு காண்கிறார்கள். ஆனால், திரண்டு வந்துள்ள இந்த மக்கள் வெள்ளம் உறுதியுடன் உள்ளது. எந்தச் சூழலிலும் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம், ஒரே பெயரில் இருந்த இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன, இறந்தவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன, மேலும், சட்டவிரோதமாக ஊடுருவியவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இது வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணி.
ஆனால், காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியும் தவறான கருத்துக்களைப் பரப்பி, நாட்டு மக்களை திசை திருப்ப முயல்கின்றன.
டெல்லி ஜந்தர் மந்தரில் கூட்டத்தைக் கூட்டி, நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க முடியும் என்று இண்டியா கூட்டணி கருதுகிறது. அது அவர்களின் தவறு. ஜனநாயகத்தைப் பாதுகாக்க லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மீது மக்களுக்கு அசைக்க முடியாது நம்பிக்கை உள்ளது.
அவசர நிலையை அமல்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கலைத்ததன் மூலம் ஜனநாயகத்தைக் கொன்ற பாவம் காங்கிரஸ் கட்சியையே சாரும். அவர்களால் வெற்றி பெற முடியாது” என தெரிவித்தார்.