சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் பயிலும் 16.72 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரத்த சோகையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.6.37 கோடி மதிப்பீட்டில் ‘இரும்புக் கண்மணித் திட்டத்தை’ செயல்படுத்த தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ‘ரத்த சோகையற்ற இந்தியா’ திட்டத்தின்கீழ், 2026-27-ம் ஆண்டுக்கான தேசிய நல்வாழ்வுக் குழுமச் செயல் திட்டத்தில் இத்திட்டத்துக்காக ரூ.6 கோடியே 37 லட்சத்து 43 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைப் பயன்படுத்தி ‘இரும்பு கண்மணி திட்டத்தை’ செயல்படுத்த தேசிய நல்வாழ்வுக் குழுமம் - தமிழ்நாடு இயக்குநருக்கு நிர்வாக ஒப்புதலும் அனுமதியும் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.