தமிழகம்

தஞ்சை அருகே விவசாய நிலத்திலிருந்து பழங்காலத்து சிலைகள் கண்டெடுப்பு

சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், மானம்பாடியில் உள்ள வயலில் இருந்து பழங்காலத்து சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

மானம்பாடி, பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் அலக்ஸான்டர் (36). இவர், தனக்கு சொந்தமான வயலில் உள்ள வரப்பை வெட்டும்போது, அங்கு பழங்காலத்து சிலைகள் இருப்பதை கண்டறிந்தார்.

பின்னர், இது தொடர்பாக, அவர், கிராம நிர்வாக அலுவலர் லோகநாதனுக்கு தகவல் அளித்ததின் பேரில், அந்த இடத்திற்கு வந்த அவர், சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட யானை சிலை, 1, திருவாச்சி 1, சிறிய சுவாமி சிலைகள் 3, உடைந்த பானை 1 என மொத்தம் 6 எண்ணிக்கையில் உலோகத்தினாலான சிலைகளை சேகரித்தார். பின்னர், திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வட்டாட்சியர் சாந்தமீனாவிடம், அந்த உலோகச் சிலைகளை வழங்கினார்.

இது தொடர்பாக வருவாய்த் துறையினர் கூறியது: கண்டெடுக்கப்பட்ட சிலைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், இங்கு வந்து சிலைகளை சேகரித்துக் கொள்வார்கள். பின்னர், தொல்லியியல் துறையினர், சிலைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபின், இந்த சிலைகள் குறித்து தெரிய வரும் எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT