

புதுக்கோட்டை: சிவகங்கை திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலகுறிச்சி, ஆர்.சீகம்பட்டி, ரெகுநாதபட்டி, வைரன்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட ஆறு கிராமங்கள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடத்த தேர்தலில், இந்த கிராம மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால், இந்த கிராமங்களில் மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி, பாலகுறிச்சியை சேர்ந்த பாஜக பிரமுகர் லட்சுமணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருப்பத்தூர் தொகுதியில் தங்கள் கிராமத்தை சேர்த்துள்ளதால், நிர்வாக உதவிகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆறு கிராமங்களை புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் சேர்க்க கோரி, பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் 6 கிராமங்களைச் சேர்ந்த 2,012 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதால், இந்த ஆறு கிராமங்களுக்கும் மீண்டும் புதிதாக வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தேர்தலின் போது இந்த ஆறு கிராம மக்களை வாக்களிக்க விடாமல் யாரும் தடுக்கவில்லை. தேர்தல் முடிந்த பிறகு எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும் என கேள்வி எழுப்பி, இந்த வழக்கு செல்லதக்கதல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரிய கருப்பன் திமுக சார்பில் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடதக்கது.