சென்னை: இளைஞர்கள், சிறுவர்கள் தவறான வழிகளில் செல்வதை தடுக்க அனைத்து கிராமங்கள், நகர்ப்பகுதிகளில் விளையாட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் இளைஞர்களும், சிறுவர்களும் பெருமளவில் மது மற்றும் போதைக்கு ஆளாகியுள்ள நிலையில், அந்த தீய வழக்கங்களில் இருந்து அவர்களை மீட்டெடுக்க மரபுகளை கடந்த வழிமுறைகளையும் பின்பற்றியாக வேண்டும்.
இளைய சமுதாயத்தை மீண்டும் சரியான பாதையில் வழி நடத்தி செல்ல சிறந்த தீர்வு விளையாட்டு தான். இதை கருத்தில் கொண்டு அனைத்து கிராமங்களிலும், நகர்ப்பகுதிகளிலும் விளையாட்டு ஊக்கு விக்கப்பட வேண்டும்.
அனைத்து கிராமங்களிலும் தற்காலிகமாகவாவது விளையாட்டு திடல்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். சிறுவர்களும், இளைஞர்களும் அதில் விளையாட விளையாட்டு கருவிகள் வாங்கித் தரப்பட வேண்டும்.
பள்ளிகளில் விளையாட்டு பாட வேளைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக ஆண்டுக்கு ஒருமுறை வட்ட, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயிலை இடிக்கக்கூடாது
அன்புமணி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்துள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை, நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக இடிக்க என்என்சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையாக திகழும் கோயிலை இடிக்க துடிப்பது கண்டிக்கத்தக்கது. அங்காளம்மன் - பாவாடைராயன் கோயில் அதே பகுதியில் நீடிப்பதால் என்எல்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
அதே நேரத்தில் அந்த கோயில் இடிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கை பாதிக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டு தெற்கு மேலூர் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை இடிக்கும் முடிவை என்எல்சி நிறுவனம் கைவிட வேண்டும்.
இந்த விஷயத்தில் என்எல்சிக்கு தமிழக அரசும் போதிய அழுத்தம் கொடுத்து இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.