சென்னை: அரிசி விலை அதிகரித்துள்ளதால், ஆந்திரா வழியில் தமிழகத்திலும் நியாயவிலைக் கடைகளில் சன்னரக அரிசியை கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அன்றாட பயன்பாட்டுக்கான அரிசி விலை கடந்த இரு மாதங்களில் கிலோவுக்கு ரூ.17 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தவித்து வரும் நிலையில், அவர்களின் துயரத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
அரிசி விலை மட்டுமின்றி, பருப்பு வகைகள், சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை குறைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தல், மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு உள்நாட்டு சந்தையில் அரிசியின் புழக்கத்தை அதிகரித்து விலையை குறைக்க வேண்டும்.
அதேபோல், மாநில அரசும் அதன் பங்குக்கு விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆந்திர மாநில அரசை பின்பற்றி, தமிழகத்திலும் இலவசமாக வழங்கப்படும் அரிசி தவிர, சன்னரக அரிசியை கிலோ ரூ.50 என்ற விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அரிசி ஆலைகள் மற்றும் மொத்த வணிகர்களிடம் உள்ள அரிசியில் 20 சதவீதத்தை அடக்க விலைக்கு கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.