பாமக தலைவர் அன்புமணி | கோப்புப் படம்
சென்னை: மாநகர பேருந்துகளுக்கு குத்தகை முறையில் நடத்துநர்களை நியமிக்கக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்போருக்கு பேருந்து நிறுத்தங்களில் பயணச்சீட்டு வழங்குவதற்காக 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரபிரதேசத்தை சேர்ந்த எஸ்.எஸ். என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்தத்தை தவெக அரசு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை நியமனங்களை ஜனநாயகத்திலும், சமூகநீதியிலும் அக்கறை கொண்டுள்ள எந்த அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த கொள்கைகளில் தவெக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மாநகர போக்குவரத்து கழகம் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் குத்தகை முறை நியமனங்களை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்.
காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் 5 கொலை
அன்புமணி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவில் மது போதையால் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.
அதேபோல், சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் 25 வயது இளைஞர் கழுத்தை அறுத்து படுகொலை, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நரேஷ்குமார் என்ற இளைஞர் வெட்டிக்கொலை, சென்னை தியாகராய நகர் அடுக்குமாடி குடியிருப்பில் ராதா என்ற பெண் நகைக் காக கொலை என கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.