சென்னை: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேகேதாட்டுவில் அணையை ஏன் கட்டக்கூடாது என்ற காரணங்களை குறிப்பிட்டு, பாமக தலைவர் அன்புமணி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், “மேகேதாட்டு என்ற இடத்தின் குறுக்கே கர்நாடகா அணை கட்டிவிட்டால், ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு கிடைக்காத சூழல் ஏற்படும்.
மேகேதாட்டு அணை விவகாரம் என்பது யாரோ ஒரு விவசாயிகளுடைய பிரச்சினை என்று ஒதுங்கி நிற்காமல், அனைவருடைய பங்களிப்பும் மிக அவசியம்.
தமிழக இளைஞர்கள் நினைத்தால் காவிரி நதிநீரின் அவசியம் குறித்தும், மேகேதாட்டுவில் அணை கட்டினால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்தும் அனைவருக்கும் தெரியப்படுத்தி, ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கலாம்.
மேகேதாட்டு அணையை தடுப்போம் - காவிரியை காப்போம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கான லோகோ ஒன்றை சமூக வலைதளங்களில் அன்புமணி நேற்று வெளியிட்டார்.