திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளர் கே.பாலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் அன்புமணி.
“விளம்பரத்தில் நடிக்கும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார்” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
திருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலுவை ஆதரித்து திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் அன்புமணி பேசியதாவது: திருப்போரூர் தொகுதியில் வழக்கறிஞர் பாலு வெற்றி பெற்றால் மீண்டும் பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்பார். தாரகாசுரன் என்ற அரக்கனை முருகப்பெருமான் வதம் செய்த புனிதமான மண் திருப்போரூர்.
ஆனால், பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா? சிறு பெண் பிள்ளைகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 62 ஆயிரம் குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுள்ளது.
விளம்பரத்தில் நடிக்கும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். இந்த தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த பாலாஜி தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. பறவைகள் அதிகம் உள்ள பகுதியில் ஹெலிகாப்டர் விடுகிறார்கள். இயற்கை வளங்கள் நிறைந்த தொகுதியில் ஒரு திட்டங்களும் இல்லை. திமுக கூட்டணி சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விசிக வேட்பாளர் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்.
ஆனால், பாமக வேட்பாளர் பாலு பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார். இத்தொகுதியில் மீனவர்கள் அதிகம் இருக்கிறார்கள். பூர்வக்குடி மக்களான அவர்கள் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்ற எந்த விதத்திலும் முன்னேறவில்லை. பட்டியலின் மக்களுக்கு திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? எந்த சமுதாயமாக இருந்தாலும் திமுக-வுக்கு வாக்கு மட்டுமே வேண்டும்.
பட்டியலின மக்களின் வாக்கு தகுதியானவர்களுக்குச் செல்ல வேண்டும். பட்டியலினத்தை சார்ந்தவருக்கு 1998-ம் ஆண்டு முதன் முதலில் மத்திய அமைச்சர் பதவியை வழங்கிய கட்சி பாமக. அதனால்தான், பட்டியலின மக்களை பாமக-வுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.