சென்னை: “சி.எம்.டி,.ஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அடுத்த மாதத்துக்கான ஊதியம் வழங்கக் கூட பணமின்றி திவாலாகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடிப்படை செலவுகளுக்கு அரசிடம் உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சி.எம்.டி.ஏ தள்ளப்பட்டது ஏன் என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அதே நேரத்தில் சி.எம்.டி.ஏ அமைப்பின் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப்பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சி.எம்.டி,.ஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அடுத்த மாதத்திற்கான ஊதியம் வழங்கக் கூட பணமின்றி திவாலாகி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 54 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் அடிப்படை செலவுகளுக்கு அரசிடம் உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சி.எம்.டி.ஏ தள்ளப்பட்டது ஏன் என்ற உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் நகர்ப்புற வளர்ச்சியை வழிநடத்திச் செல்வது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 5,904 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகளில் நிலப்பயன்பாடு, கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான்.
1972-ஆம் ஆண்டில் மதராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 54 ஆண்டுகளாக நிதி நிலையில் தற்சார்புடன் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த அமைப்பின் நிதிநிலை மிக மோசமாக சீரழிக்கப்பட்டிருக்கிறது.
ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட உடனடி செலவுகளுக்கு பணம் இல்லை என்பதால், உடனடியாக மானியம் மற்றும் நிதியுதவியாக ரூ.200 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அண்மையில் சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதியதைத் தொடர்ந்து தான் அதன் அவலநிலை அம்பலமாகி உள்ளது. சி.எம்.டி.ஏ அமைப்புக்கு இன்றைய நிலையில் சுமார் ரூ.3500 கோடி அளவுக்கு கடன் பொறுப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ. அமைப்பு இயல்பாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு சுமை ஏற்பட வாய்ப்பில்லை.
ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் சி.எம்.டி.ஏ மூலம் சென்னையில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனால் தான் சி.எம்.டி.ஏ. இவ்வளவு பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ.வின் முதன்மைப் பணி என்பது கட்டுமானப் பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்குவது தான். அதற்காக வசூலிக்கப்படும் மிகக் குறைந்த கட்டணம் தான் சி.எம்.டி.ஏ.வின் ஒற்றை வருவாய் ஆதாரம் ஆகும். அதைக் கொண்டு தான் ஊழியர்களுக்கான ஊதியம், நிர்வாகச் செலவுகள் ஆகியவற்றை சி.எம்.டி.ஏ. சமாளித்து வந்தது. கடந்த 54 ஆண்டுகளாக எந்த சிக்கலும் இல்லாமல் சி.எம்.டி.ஏ. அமைப்பின் நிர்வாகம் நடைபெற்று வந்தது.
சென்னைக்கு தேவையான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய சுமை சி.எம்.டி.ஏ மீது சுமத்தப்பட்டதால் தான் அதன் நிதி நிலை மோசமடைந்தது. சென்னை மாநகரில் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவற்றை மேற்கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் பணி ஆகும். சி.எம்.டி.ஏ. என்பது அடிப்படையில் ஒழுங்கு முறை அமைப்பு ஆகும். அத்தகைய அமைப்பின் மீது கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு சுமத்தப்பட்டது அதன் நிதியை கொள்ளையடிக்க நடந்த சதி ஆகும்.
முந்தைய திமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் ஊழலும், கொள்ளையும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. ஊழல் செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல ஆட்சியாளர்கள் துணிந்திருந்தனர். 2025&26ஆம் ஆண்டிலேயே சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத சாலைத் திட்டங்களுக்கு 2026-&27ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை நிதியிலிருந்து ரூ.2000 கோடி ஒதுக்கி ஒப்பந்தம் வழங்கும் அளவுக்கு திமுக அரசு விதிமீறல்களை அரங்கேற்றியது. இதற்கு காரணம் நிதி இல்லாத நிலையிலும் நெடுஞ்சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு கையூட்டு வசூலிக்க வேண்டும் என்ற பேராசை தான். இதை கடந்த ஜனவரி மாதத்திலேயே அறிக்கை மூலம் அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்திருந்தேன்.
நெடுஞ்சாலைத் துறையை நிர்வகித்தவர்கள் அடுத்த ஆண்டுக்கான நிதியில் முன்கூட்டியே ஒப்பந்தம் வழங்கி ஊழல் செய்தால், சி.எம்.டி.ஏவை நிர்வகித்தவர்கள் தங்கள் பங்குக்கு ஊழல் செய்வதற்காக ஒழுங்குமுறை அமைப்பான சி.எம்.டி.ஏவை கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளச் செய்து, அதற்கான ஒப்பந்தங்களின் மூலம் ஊழல் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. முந்தைய ஆட்சியாளர்களின் அந்த பேராசை தான் சி.எம்.டி.ஏவை ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லாத நிலைக்கு தள்ளியுள்ளது.
சி.எம்.டி.ஏ அமைப்பை உட்கட்டமைப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியவர்கள் யார்? சி.எம்.டி.ஏ அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் யார், யாருக்கு வழங்கப்பட்டன? அவற்றில் ஊழல்கள், முறைகேடுகள் நடந்தனவா? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதே நேரத்தில் சி.எம்.டி.ஏ அமைப்பின் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.