சென்னை: மேகேதாட்டு அணை மட்டும் கட்டப்பட்டால் கபினி அணையில் இருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைக்காது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு சட்டப்படியாக வழங்கப் பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை.
ஆனால், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது மேகேதாட்டு அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழகத்துக்கு கிடைக்காது.
அதனால், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக்கூடாது. அனைத்து கட்சிகள், வேளாண் அமைப்புகளின் கருத்துகளை அறிந்து தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மாமல்லன் நீர்த்தேக்கம்
அன்புமணி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “சென்னையை அடுத்த கானத்தூர் ரெட்டிக்குப்பத்துக்கும், கொக்கிலிமேட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உப்பங்கழிகளை அழித்து 5,161 ஏக்கர் நிலப்பரப்பில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முந்தைய திமுக ஆட்சியில் கடந்த ஜனவரி 19-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை பகுதிகளில் வாழும் 5 ஆயிரம் மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிடாது என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்த திட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தவெக இப்போது பின்வாங்குவது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.