சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தியிருப்பது குறித்து மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பிய நிலையில், மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் என நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் “தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது” என்று எடியூரப்பா உட்பட பாஜக தலைவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பார்க்கத் தவறிவிட்டாரா என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பிய நிலையில், நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான், கடந்த 2018-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
மத்திய பாஜக அரசு அமைத்த ஆணையம் தண்ணீரை வழங்குமாறு உத்தரவிட்டும் காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்துவிட்டது குறித்து முடிந்தால் கேள்வி கேளுங்கள்.
அதை விட்டுவிட்டு மத்திய பாஜக அரசின் மீது பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல். தமிழக முதல்வரை சந்திக்க வருமாறு கூறிவிட்டு, பின்பு சாக்குபோக்கு சொல்லி கதவை மூடி, அவமானப்படுத்தியது ஏன் என கர்நாடக முதல்வருக்கு முடிந்தால் கண்டனம் தெரிவியுங்கள்.
தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மேகேதாட்டு அணை திட்டத்தை கைவிடுமாறு எடுத்துக் கூறுங்கள். தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தி, தற்போது தமிழகத்தில் பற்றி எரியும் காவிரி நீர் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிச் சென்றதில் இருந்தே தெரிகிறது, காங்கிரஸ்காரர்களுக்கு தமிழகத்தின் மீதுள்ள அக்கறை.
கர்நாடகாவில் காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
காவிரி நீர் பிரச்சினை மட்டுமா, கச்சத்தீவை தாரை வார்த்து மீனவர்களுக்கும் துரோகம் இழைத்த கட்சி தானே காங்கிரஸ்.
எனவே, தமிழக நலனைப் பற்றி நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் பாஜக என்றுமே தெளிவான நிலைப்பாட்டில்தான் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.