பாமக தலைவர் அன்புமணி
சென்னை: இந்தியா முழுவதும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு நெருங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை செயல்படுத்துமா? என்ற வினா எழுந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது: கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ள மத்திய அரசு, 125 நாள் வேலைத் திட்டம் என்ற புதியத் திட்டத்தை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்திற்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு இன்னும் இரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மாநிலங்கள் உள்ளிட்ட 19 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த அறிவிக்கை வெளியிட்டுள்ளன.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ஆந்திரம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன. தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதா அல்லது இத்திட்டத்தின் அம்சங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதா? என்பது குறித்து கலந்தாய்வு நடத்தி வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பட்சத்தில், மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான மாநில அரசின் சார்பில் தனி வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவும் தெலங்கானா மாநிலம் முடிவு செய்துள்ளது.
ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு இன்னும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் மாநில அரசுகளின் பங்கு 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்; அதுமட்டுமின்றி எந்த வகையான பணிகளை மேற்கொள்வது என்பதைத் தீர்மானிப்பதில் மத்திய அரசுக்கு தான் அதிக அதிகாரம் உண்டு என்பதால், இத்திட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதா, அதை எதிர்த்து அரசியல் மற்றும் சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பதா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு. அரசின் நிலைப்பாடு எதுவாயினும் அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
125 நாள் வேலை உறுதித் திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதன் பங்காக 40% தொகை ரூ.5305.04 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன்மூலம் இந்தத் திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.13,262.61 கோடி கிடைக்கும். தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒரு நாள் வேலை வழங்க ரூ.479.49 செலவாகும் நிலையில், தமிழகத்திற்கான மொத்த நிதியைக் கொண்டு 27.68 கோடி மனித வேலை நாட்களை ஏற்படுத்த முடியும். தமிழ்நாட்டில் 69.76 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து வேலை செய்து வரும் நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 39.69 நாள்கள் வேலை வழங்க முடியும். 2021-22 முதல் 2024-25ம் ஆண்டு வரை சராசரியாக முறையே 50.95, 50.96, 59.44, 46.86 நாள்கள் வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால், நடப்பாண்டில் அதை விட குறைவாகவே வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மாறாக, இந்தத் திட்டத்தை அறிவிக்கை செய்யாவிட்டால், தமிழ்நாட்டில் புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1791.33 கோடியில் செலவிடப்பட்ட ரூ.1350.43 கோடி போக மீதமுள்ள ரூ. 440.90 கோடியை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தத் தொகையைக் கொண்டு சராசரியாக 1.30 நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். அதன்பின் தமிழக அரசு அதன் சொந்த நிதியைக் கொண்டு தான் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டியிருக்கும்.
எனவே, 125 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுமா? என்பதை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவதில்லை என முடிவு செய்தால், தவெக-வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டவாறு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்குவதற்கான மாற்றுத் திட்டம் என்ன? என்பதையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.