சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை, பாமக தலைவர் அன்புமணி நேற்று சந்தித்துப்பேசினார். பாமக எம்எல்ஏக்கள் சி.சிவகுமார், ஜி.வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ எம்எல்ஏ எம்.கார்த்தி, செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு உடன் இருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் 25 நிமிடங்கள் விளக்கமாக தெரிவித்தேன்.
முதல்வரின் பேச்சு நம்பிக்கையைத் தருகிறது. தமிழக பட்ஜெட்டில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால், இரண்டு மாதத்தில் கணக்கெடுப்பை முடித்துவிடலாம். கர்நாடகாவில் இரண்டு லட்சம் அதிகாரிகள் துணையோடு ரூ.600 கோடி செலவு செய்து, அந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளனர்.
தவெக அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிறது. நன்றாக செயல்படுகிறார்கள். ஊழல், லஞ்சம் பெரிய அளவில் குறைந்துள்ளது. பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆட்சியாளர்கள் மாறி உள்ளனர். அதிகாரிகள் மாற நேரம் வேண்டும். திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே இருக்கும் மின்திட்டங்களைசெயல்படுத்தவில்லை.
புதிதாக மின்திட்டங்களைத் தொடங்க வில்லை. மேகேதாட்டு பிரச்சினை சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
முடிவெடுப்பதாக முதல்வர் தெரிவித்தார். கர்நாடக முதல்வர் சிவகுமார், இதனை பேசித்தான் முதல்வராக உள்ளார். 2028-ல் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வருகிறது. அதுவரை முதல்வர் சிவக்குமார், இதனை விடமாட்டார்.
அப்போதுதான் அவர்களுக்கு வாக்கு கிடைக்கும். தற்போதே கர்நாடக அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நீரை முறையாக கொடுப்பதில்லை. மேகேதாட்டுவில் அணை கட்டினால், உபரி நீர் கூட நமக்கு கிடையாது. சுமார் 5.5 கோடி மக்கள் காவிரியை நம்பிதான் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.