தமிழகம்

மக்கள் நலன் காக்க விஜய்யின் அரசுக்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்: அன்புமணி

மு.சக்தி

சென்னை: மக்கள் நலன் காப்பதற்கான விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவை அளிக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. புதிய முதல்வருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருப்பது எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நோக்கமும், எதிர்பார்ப்பும் ஒன்று தான். எந்த வகையான போதையும் இல்லாத, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய, இளைஞர்களுக்கு தரமான கல்வியும், வேலை வாய்ப்பும் வழங்கக்கூடிய, உழவர்களின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக் கூடிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய, இவை அனைத்துக்கும் மேலாக சமூக நீதியை பாதுகாக்கக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான் அது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிரமாக முயல வேண்டும்.

தவெக-வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முதல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆணையில் புதிய முதல்வர் முதல் கையெழுத்திட வேண்டும்; மற்ற வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் காப்பதற்கான விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக அதன் முழு ஆதரவை அளிக்கும்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அந்தத் தவறை திருத்தச் செய்வதிலும் பொறுப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாமக செயல்படும்.” என்று அன்புமணி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT