பாமக தலைவர் அன்புமணி
சென்னை: திமுக அரசு 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின், 2021 தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதி நிறைவேற்றியிருப்பதாக கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி, அரசு ஊழி யர்கள் மீண்டும் போராடத் தொடங்கியுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர்களை பணிநிலைப்பு செய்வதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படவில்லை, மாதம் ஒரு முறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வரவில்லை, ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை.
ஆனால், 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவதன் மூலம், தமிழக மக்களை முட்டாள்களாக்க திமுக முயல்கிறது. திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் இது குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஒப்புக்கொண்டு, மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.