சென்னை: தமிழகத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், எந்த கவலையும் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: பகுதி நேர ஆசிரியர்களும் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் மாற்றுத்திறனாளி தற்காலிக பணியாளர்களும் சென்னையில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்து 55 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று வரை தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடினால், அடக்குமுறையைத் தான் பரிசாக அளிக்கிறது திமுக அரசு. தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
ஆனால், இதுகுறித்த எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் திமுகவை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்றுவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.