சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாமகவின் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாநகராட்சி பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று நடந்தது.
சென்னை: ‘என்னை பாமக தலைவராக்கிய அடுத்த நாளில் இருந்தே கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி சூழ்ச்சியை தொடங்கி விட்டார். ராமதாஸை சுற்றி திமுக கைக்கூலிகள், துரோகிகள் உள்ளனர்’ என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாமகவின் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாநகராட்சி பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று நடந்தது.
அதில் அவர் பேசியதாவது: திமுக சூழ்ச்சி செய்து வன்னியர்களையும், பட்டியலின மக்களையும் ஒன்றுசேர விடாமல் பார்த்து கொள்கிறது. சில திமுக கைக்கூலிகள், துரோகிகள் தற்போது ராமதாஸை சுற்றி கொண்டிருக்கிறார்கள். தைலாபுரத்தை திமுக டேக்ஓவர் செய்துவிட்டது.
அவர்களை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன். இன்னும் மூன்று மாதத்தில் யார் யார் சிறைக்குச் செல்ல போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியவரும். அப்பா, பிள்ளை உறவு என்னை பாமக தலைவராக்கிய அடுத்த நாளில் இருந்தே ஜி.கே.மணி சூழ்ச்சியை தொடங்கிவிட்டார்.
அப்பா, பிள்ளை உறவை பிரித்தது அவர்தான். என்னைப் பற்றி தவறான விஷயங்களை எல்லாம் சொல்லி, ராமதாஸுக்கும் எனக்கும் பகையை உருவாக்கியது ஜி.கே.மணிதான். டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு தோற்றுவிட்டது.
ஆனால் வெற்றி பெற்றதாக ராமதாஸிடம் தவறான தகவல்களை சொல்லி, அவரை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு பின்னால் இருப்பதும் திமுகதான்.பொய்களை நம்ப வேண்டாம் யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கி இருக்கிறார்கள் என்ற அனைத்து விவரங்களும் என்னிடம் இருக்கிறது.
அருள், ஜி.கே.மணி போன்றோர் செய்யும் பொய்களை பாமகவினர் நம்ப வேண்டாம். பாமகவும், கட்சியின் சின்னமும் நம்மிடம்தான் உள்ளது. சட்டரீதியாகவும், கட்சி விதிகளின்படியும் பாமக நம்மிடம்தான் உள்ளது. அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.
அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்துக்குச் சென்றால் வழக்கு 7 ஆண்டுகள் வரை கூட நடக்கும். நீங்கள் தெளிவாக இருந்து, களத்தில் இறங்கி பாடுபடுங்கள். இவ்வாறு தெரிவித்தார்.