| படம்: எம்.முத்துகணேஷ் |

 
தமிழகம்

“அரசியலை தெரிந்து கொண்டனர்; இளைஞர்களை நம் பக்கம் திருப்ப வேண்டும்” - அன்புமணி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘அரசியலை இளைஞர்கள் தெரிந்து கொண்டனர், அவர்களை நம் பக்கம் திருப்ப வேண்டும்’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பாமகவின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் அவர் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் தவெக தேர்தலில் சுனாமியாக வெற்றி பெறவில்லை. 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில்கூட வெற்றி அடையவில்லை. கடந்த ஓராண்டில் பாமகவில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.

களையை தூக்கி எறிந்துவிட்டோம். பயிர் நன்றாக இருக்கிறது. அடுத்து நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றிகளை பெறுவோம். திமுகவை அகற்ற வேண்டும் என்பது பாமகவின் நோக்கமாக இருந்தது. அது நடந்துவிட்டது.

அரசியலை இளைஞர்கள் தெரிந்து கொண்டார்கள். அரசியல் மீது அவர்களுக்கு ஆர்வம் வந்துள்ளது. அவர்களை நம் பக்கம் திருப்ப வேண்டும். முதல்வர் விஜய் என்னை சந்தித்தார்.

அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பல்வேறு புள்ளி விவரங்கள் தெரியவரும். அதன் அடிப்படையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தலாம் என்று தெரிவித்தேன். தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்து இருக்கிறோம்.

உறுதியாக நாங்கள் செய்வோம் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார். கட்சியில் மறு சீரமைப்பு விரைவில் நடைபெறும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொறுப்புகளுக்கு வர வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொன்னாடை வேண்டாம்

பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும், தருமபுரி தொகுதி எம்எல்ஏவுமான சவுமியா அன்புமணி பேசும்போது, “நாம் மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்துகிறோம். அது நல்ல விஷயம்தான். அதற்கு பதில், நம்முடைய கட்சிக்கு நிதியாகவே கொடுக்கலாம்.

ஏனென்றால் பொன்னாடையை எந்த அளவுக்கு உபயோகப்படுத்துகிறோம் என்பது தெரியவில்லை” என்றார். அப்போது அன்புமணி, “சவுமியா என்ன சொல்கிறார் என்றால் யாரும் மற்றவர்களுக்கு பொன்னாடை போட வேண்டாம்.

பொன்னாடை ஒன்றை ரூ.50 முதல் ரூ.1000 வரைகூட வாங்குகிறீர்கள். அந்த பணத்தை வீணாக்க வேண்டாம். அதற்கு பதில் கட்சியின் ‘பார்கோடு’க்கு ரூ.50 போட்டால், உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT