“திமுகவினர் சொல்வதை பாமக-வில் இருக்கும் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்த திமுகவினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள கீழ்சிவிரி மற்றும் நல்லாவூர் கிராமத்தில் உள்ள ஐயனார் கோயில், திரவுபதி அம்மன் கோயிலுக்கு மனைவி சவுமியாவுடன் நேற்று வருகை தந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கு வழிபாடு நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
பாமக தலைவராக இந்திய தேர்தல் ஆணையம் அடுத்தாண்டு ஆகஸ்ட் வரை விதிகளின் படி என்னை நீடிக்க அனுமதி அளித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, “தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது, உட்கட்சி பிரச்சினை இருந்தால் சிவில் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடலாம்” என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப்படி அடுத்தாண்டு ஆகஸ்ட் வரை பாமக தலைவராக நான் தொடர்வேன்; மாம்பழம் சின்னமும் எங்களிடம் தான் உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இதே தீர்ப்பைத்தான் வழங்கினார். உட்கட்சி பிரச்சினை இருந்தால் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் என அவரும் தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கிய அங்கீகாரம் தொடர்பாக எந்தக் கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. மாம்பழம் சின்னத்தைப் பற்றி நீதிமன்றம் எதுவும் கூறவில்லை. இதனால் குழப்பம் இல்லை. பாமக தலைவராக தொடர்ந்து நான் நீடிப்பேன். தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரம் தொடரும். நீதிமன்றத்தில் அவர்கள் (ராமதாஸ்) வழக்கு தாக்கல் செய்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும். பாமக-வில் இப்போது எந்தக் குழப்பமும் இல்லை. எங்களுக்கு இம்முறை கூடுதலாக வாக்குகள் கிடைக்கும். பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்த திமுகவினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. திமுக சொல்வதை பாமக-வில் உள்ள அவர்களது ஆதரவாளர்கள் சிலர் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்தாண்டு நடத்திய 7 தேர்வுகளில் 10 ஆயிரம் பேருக்குத்தான் பணிவழங்கி உள்ளனர். அடுத்தாண்டு 6 தேர்வுகள் என்றால் 6 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கிடைக்கும். திமுக ஆட்சியில் அரசுப் பணிகளை, ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து விடுகின்றனர்.
ஆட்சிக்கு வந்தால், 5 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 7 லட்சம் பணியிடங்கள் காலியாக இருந்தும், நிரப்பப்படவில்லை. போக்குவரத்து, துப்புரவு பணியை தனியார் மயமாக்கி இருக்கின்றனர். கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என உள்ளனர். பணம் கொடுப்பவர்களுக்கே ஒப்பந்தங்களை வழங்குகின்றனர். இந்தத் தேர்தலில் பாமக இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும். திமுக கூட்டணி தோல்வி அடையும். திமுக ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.