

சென்னை: பாமக விவகாரத்தில் இருதரப்பும் உரிமை கோரினால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் பதிலளித்ததையடுத்து, சிவில் நீதிமன்றத்தை அணுகும்படி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சியை கைப்பற்ற இரு தரப்பினரும் சில மாதங்களுக்கு முன்பு பொதுக் குழுவை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினர். இதனிடையே, அன்புமணி தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
அதோடு 2026 ஆகஸ்ட் வரை கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்வார். பாமக சார்பில் தேர்தலில் போட் டியிடும் வேட்பாளர்களின் ‘ஏ’ மற்றும் ‘பி' படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்குத்தான் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி மினி புஷ்கர்னா நேற்று விசாரித்தார்.
உள்கட்சி விவகாரங்களில்... ராமதாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பல்வீர் சிங் ஆஜராகி,‘‘அங்கீகாரமற்ற அரசியல் கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தேவையில்லாமல் தலையிட்டுள்ளது. கட்சியின் முன்னாள் தலைவர் அன்புமணியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை உள்ளது என்று தெரிவித்துள்ளது.
அன்புமணியின் பதவிக் காலம் கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது. ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு பொதுக் குழு நடத்தப்பட்டதாக போலியான ஆவணங்களை அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மனுதாரர் ராமதாஸ் எழுதிய பல கடிதங்களை தேர்தல் ஆணையம் புறந்தள்ளிவிட்டது. எனவே, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு கடிதங்களை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
இதற்கு அன்புமணி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதுடன், ‘‘முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1 வரை உள்ளது.
பாமக நிறுவனருக்கு வயது மூப்பு ஏற்பட்டுள்ளதால், கட்சியை வழிநடத்த அடுத்த கட்டமாக மகன் பொறுப்பேற்றுள்ளார். எனவே ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையத்தில் சார்பில், ‘‘பாமக அங்கீகாரமற்ற கட்சி என்பதால் உள்கட்சி விவகாரங்களில் அதிகம் தலையிட முடியாது. தற்போதைய ஆவணங்களின்படி அன்புமணி பாமகவின் தலைவராக உள்ளார்.
இருப்பினும், கட்சிக்கு இரு தரப்பும் உரிமை கோரி தேர்தலில் சின்னம் கோரினால் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சின்னத்தை பிரச்சினை முடியும் வரை வழங்க முடியாது’’ என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி மினி புஷ்கர்னா, அங்கீகாரமற்ற உள்கட்சி பிரச்சினை தொடர்பாக ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. சிவில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று பல்வேறு வழக்குகளை சுட்டிகாட்டி ராமதாஸின் மனுவை முடித்து வைத்தார்.