மதுரை: மதுரை அதிமுகவில் செல்வாக்கு மிக்கவர்களாகத் திகழும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு இந்த சட்டப்பேரவைத் தேர்தல் அவர்களது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளது.
மதுரை மாவட்ட அதிமுகவில் மாநகர் செயலாளர் செல்லூர் ராஜூ, புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் அதிகார பலமும், செல்வாக்குமிக்கவர்களாகவும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக, அதிமுக ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ இவர்கள் மூவரும் அதிகாரத்தில் இருந்தனர்.
2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் அமைச்சர்களாகவும், வி.வி.ராஜன் செல்லப்பா மதுரை மேயராகவும் இருந்தனர். 2016 முதல் 2021 வரை செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகவும், விவி.ராஜன் செல்லப்பா வடக்குத் தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருந்தனர்.
கடந்த 2021 முதல் தற்போது வரை அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் எம்எல்ஏ-வாகவும், அக்கட்சியில் அதிகாரமிக்க மாவட்டச் செயலாளர்களாகவும் உள்ளனர்.
ஆர்.பி.உதயகுமார், மாவட்டச் செயலாளராக மட்டுமின்றி ஜெ.பேரவை மாநிலத் தலைவர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் உள்ளார். இப்படி அதிமுக எதிர்க்கட்சி, ஆளும்கட்சியாக இருந்தாலும் மூவரும் கட்சி, ஆட்சி இரண்டிலும் அதிகார மையங்களாகவே உள்ளனர்.
இந்நிலையில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் மூவரும் எதிர்பார்த்தபடியே, அவர்கள் விரும்பியபடியே போட்டியிட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வாய்ப்பை வழங்கியுள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ, தான் 3 முறை வென்ற மேற்குத் தொகுதியிலும், ஆர்.பி.உதயகுமார், தான் 2 முறை வென்ற திருமங்கலத்திலும், வி.வி.ராஜன் செல்லப்பா, இரண்டாவது முறையாக திருப்பரங்குன்றத்திலும் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் மூவரது வெற்றிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைமை வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. ஆர்பி.உதயகுமாரிடம் கடந்த முறை தோல்வியடைந்த திமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் பேரவைத் தலைவர் சேடபட்டி முத்தையாவின் மகனுமான மணிமாறன் இந்த முறை எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.
திமுகவை மிக கடுமையாக விமர்சிக்கும் ஆர்.பி.உதயகுமாரை தோற்கடிக்க, முதல்வரின் மருமகன் சபரீசன் இத்தொகுதி மீது கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பணிகளில் கைதேர்ந்தவர் என்பதாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொகுதி மக்களுடன் மிக நெருக்கமாக இருந்து வருவதாலும், 5 ஆண்டுகளில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
திமுகவுக்கு எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார் என்கின்றனர் அவரது கட்சியினர். செல்லூர் ராஜூவை தோற்கடிக்கும் திட்டத்தை திமுக தலைமை, அமைச்சர் பி.மூர்த்தியிடம் ஒப்படைத்துள்ளதால், அவர் தகுதியான வேட்பாளராக ஆர்.பாலாஜியை களத்தில் நிறுத்தியுள்ளார்.
அவர் செல்லூர் ராஜூ வுக்கு தேர்தல் களத்தில் கடும் சவாலாகத் திகழ்வதால் போட்டி கடுமையாகியுள்ளது. செல்லூர் கே.ராஜூவை வீழ்த்தியாக வேண்டும் என்பதால், ஆர்.பாலாஜியின் வெற்றி்க்காக மாவட்டத்திலேயே இத்தொகுதியில் மட்டும் முதல்வர் ரோடு ஷோ நடத்தினார்.
ஆனால், செல்லூர் ராஜூவின் கலகலப்பான பிரச்சாரமும், அவரது தேர்தல் அனுபவமும் கைகொடுக்கும் என அதிமுகவினர் நம்புகின்றனர். திருப்பரங்குன்றத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா, ஓராண்டுக்கு முன்பிருந்தே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியிட்ட நிலையில் தற்போது, திமுக சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டியன் போட்டியிடுகிறார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்திவரும் அவர் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறார். ஆனால், வி.வி.ராஜன் செல்லப்பாவின் அரசியல் அனுபவம், தேர்தல் வியூகங்களும், தொகுதி வெற்றி வரலாறும் அவரை கைவிடாது என்கின்றனர் அதிமுகவினர்.
இந்த முறை வி.வி.ராஜன் செல்லப்பா வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமையும்பட்சத்தில் அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுவதால் அவரது மகனும், மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளருமான ராஜ்சத்யன் தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த மூவரில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்கள் அதிமுகவின் அதிகார மையங்களாகத் தொடரவும், வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் அரசியலில் சரிவைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.