கன்னிகைப்பேர் தொழிற்சாலையில் இருந்து டேங்கர் லாரிக்கு மாற்றப்படும் அமோனியா.
பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 51 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த தொழிற்சாலையில் 3 டேங்கர்களில் சேமித்து வைக்கப்பட்ட 2 டன் அமோனியாவை அகற்றும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது.
வல்லுனர்கள் குழுவினர் பாதுகாப்பாக டேங்கர் லாரியில் அகற்றினர். இந்த நிலையில் டெங்கர்களில் மீதமுள்ள அமோனியாவையும், தொழிற்சாலையில் பைப்புகளில் தேங்கியுள்ள அமோனியா அகற்றும் பணிகள் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.
அமோனியா கையாள்வதில் அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் குழுவினர் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பல துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டனர்.
சாலையில் தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் பெரும்பாலான அமோனியா வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், 90 சதவீத அளவுக்கு பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மீதமுள்ள பணிகள் நாளையும் நடைபெறும் என்றும் தற்போது அகற்றப்பட்ட அமோனியா இரவுக்குள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்படும் என த ரிவித்தனர்.
கன்னிகைப்பேர் பகுதியில் தொழிற்சாலையில் அமோனியா வாயுவை வெளியேற்றுவதால் பெரியபாளையம், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், ஜனப்பன் சத்திரம் பகுதியில் தடுப்புகள் வைத்து பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களை ஆரணி, வெங்கல் வழியாக மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர்.
2 நாட்கள் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு வழி பாதையில் போக்குவரத்து அனுமதிக்கபடும் என தெரிவித்தனர்.